வேலை வாங்கித் தருவதாக ₹8 லட்சம் மோசடி; முன்னாள் அதிமுக MLAக்கு போலிஸ் வலைவீச்சு!

 


திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செட்டியபட்டி, சீத்தபட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. அதிமுக பிரமுகர். இவரது மனைவி மின்னல்கொடி முன்னாள் ஊராட்சித் தலைவராக இருந்தவர். இந்நிலையில் கட்சி பொதுக்கூட்டத்தில் பழக்கமான பெரம்பலூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பூவை.செழியன் என்பவர் சின்னச்சாமியிடம் கூட்டுறவு துறையில் காலிப்பணியிடம் இருப்பதாகவும் அதில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய சின்னச்சாமி தனது மனைவி மின்னல்கொடி மற்றும் உறவினர் ஒருவருக்கும் வேலை வாங்குவதற்காக கடந்த 2018ம் ஆண்டு பூவை. செழியனிடம்; தலா 4 லட்சம் வீதம் இருவருக்கும் சேர்த்து ரூ.8 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இருவருக்கும் இரண்டு மாதத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்ட நிலையில் 2 வருடங்கள் ஆகியும் வேலையும் வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.


இதையடுத்து சின்னச்சாமி முன்னாள் எம்.எல்.ஏ பூவை. செழியனிடம் கொடுத்த பணத்தையாவது திரும்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கும் அவர் பணத்தை திரும்பித் தரவில்லை. இதுதொடர்பான சின்னச்சாமி வையம்பட்டி போலீசில் புகார் அளித்திருந்ததோடு, காவல்துறை உயரதிகாரிகளுக்கும் புகார் அனுப்பி இருந்தார். நடவடிக்கை இல்லாததால் மனஉளைச்சலில் சென்னைக்கு சென்ற சின்னசாமி, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், சின்னசாமியை தடுத்து அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர், வேலைக்காக முன்னாள் அதிமுக எம்எல்ஏவிடம் ரூ.8 லட்சம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது. இதையடுத்து மணப்பாறை டிஎஸ்பி பிருந்தாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால்; டிஎஸ்பி பூவைசெழியனை விசாரணைக்கு அழைத்தார். ஆனால் விசாரணைக்கு பூவை செழியன் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது.


இந்த பிரச்சனை தொடர்பாக வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பூவை.செழியன் மீது மோசடி, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்ததால் பூவைசெழியன் தலைமறைவானார். இதையடுத்து போலீசார், தலைமறைவான பூவைசெழியனை தேடி வருகின்றனர். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் எனது பணத்தை மீட்டுக்கொடுத்து தன்னை காப்பாற்றவேண்டும் என சின்னச்சாமி வேதனையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)