3 நாட்கள் சிபிசிஐடி காவலில் சிவசங்கர் பாபா..!!
சென்னை : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிவசங்கர் பாபா தலைமறைவானார்.
இதையடுத்து கடந்த 16 ஆம் தேதி டெல்லியில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடந்த 19 ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சிவசங்கர் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.