11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

 


+2 தேர்வு-சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை: தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா? என்பதுகுறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

நீட் தேர்வு பாதிப்பு - ஆய்வு செய்ய குழு: தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை சரிசெய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி குழு ஆய்வு செய்யும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளுக்கு அனுமதி: தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காய்கறி, மளிகைக் கடைகள், இறைச்சி விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி: காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீன் சந்தைகள், இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களில் எதற்கெல்லாம் தடை?: கொரோனா பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் மெக்கானிக் கடைகள், ஹார்டுவேர் கடைகள், புத்தக கடைகள் திறக்க தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தீப்பெட்டி ஆலைகள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி: நோய் தொற்று அதிகமுள்ள கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 10% பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதி: தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் 30 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகங்கள் 50 சதவிகித டோக்கன்கள் வழங்கப்பட்டு பத்திரபதிவு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

27 மாவட்டங்களில் சுயதொழில் செய்வோருக்கு அனுமதி: பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மின் பணியாளர்கள், பிளம்பர்கள் போன்ற சுயதொழில் செய்வோர் இ பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின் பொருட்கள் கடைகள், இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைகளும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

27 மாவட்டங்களில் ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி: சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலத்திற்கு அவசர காரணங்களுக்கு இ-பாஸ் பெற்று பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் இயங்க தடை தொடர்கிறது: ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் பேருந்துகள், வணிக வளாகங்களுக்கான தடை தொடர்கிறது. வழிபாட்டுத் தலங்கள், முடி திருத்தும் நிலையங்கள், டாஸ்மாக் கடைகளுக்கும் தடை நீடிக்கிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை: வேலூர் மாவட்டத்தில் உள்ள மோர்தானா அணை நிரம்புவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கல்லூரி ஆன்லைன் வகுப்புக்கு விரைவில் புதிய விதிகள்: தமிழகத்தில் கல்லூரி ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடு கொண்டுவரப்படுகிறது. புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு 1.20 லட்சமாக குறைவு: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரமாக குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 97 ஆயிரம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

17 மாவட்டங்களில் கொரோனா குறைந்துள்ளது: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பிற மாவட்டங்களில் தொற்று பரவல் விரைவில் கட்டுக்குள் வரும் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்