கொரோனாவால் பலியானவரின் உடலை ஆட்டோவில் எடுத்துச் செல்லும் அவலம்!

 


நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவலால் உயிரிழப்புகளும் வெகுவாக அதிகரித்து வருகின்றன. பா.ஜ.க ஆளும் பல மாநிலங்களில் அடிப்படை சுகாதாரக் கட்டமைப்பு குறைபாட்டால் மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆளும் உத்தரபிரதேசத்திலும் நிலைமை மோசமாக இருக்கிறது. அங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்த கணவரின் உடலை ரிக்‌ஷாவில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தின் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை பற்றாக்குறை நிலவுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், உ.பி-யில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பெண் ஒருவர் ஃபிரோசாபாத் பகுதியில் மருத்துவமனையில் இருந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த கணவரின் உடலை ரிக்ஷாவில் கொண்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தச் சம்பவம் குறித்து இறந்தவரின் மகன் கூறுகையில், “கொரோனாவால் பாதிகப்பட்ட எனது தந்தைக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை. இதனால் அவர் உயிரிழந்துவிட்டார்.

இறந்த உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்ல அதிகளவு பணம் கேட்டனர். அவ்வளவு பணம் இல்லாததால், ரிக்ஷாவில் வைத்து எடுத்துச் சென்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.