காவலர் குடியிருப்பில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!

 


காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள காவலர் வீட்டில் கொரோனா பரிசோதனை எடுக்க வந்துள்ளதாக கூறி அடையாளம் தெரியாத 2 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சத்தியமூர்த்தி நகர் குடியிருப்பில் வசித்து வருபவர் தர்மராஜன் (26). இவர், ஆவடி அருகே வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் அணியில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி சந்திரலேகா (24). தற்போது 5 மாத கர்பிணியாக உள்ளார். இவர்களுக்கு மதியழகன் (4) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், இன்று மாலை 3 மணி அளவில் வழக்கம்போல்  தர்மராஜன் வீட்டிலிருந்து பணிக்கு சென்றுவிட்டார்.

அதன் பிறகு, வீட்டில் சந்திரலேகா குழந்தையுடன் இருந்துள்ளார். பின்னர், 4மணி அளவில் வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டு சந்திரலேகா வந்து திறந்துள்ளார். அப்போது, அவரிடம் 2 வாலிபர்கள் கொரோனா தொற்று நோய் பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி வீட்டுக்குள் வந்துள்ளனர். அப்போது, சந்திரலேகா குழந்தை தூங்கி கொண்டிருந்தது.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் சந்திரலேகாவுக்கு தொற்று பரிசோதனை செய்ய முயன்றனர். அப்போது, அவர்களில் ஒருவர் அவரது முகத்தில் ரசாயனம் தடவிய கைகுட்டையை வைத்துள்ளார்.

இதனை அடுத்து, சந்திரலேகா மயங்கி சாய்ந்தார். அதன் பிறகு, அவர்கள் இருவரும் வீட்டு பீரோவை திறந்து அதில் இருந்த 6 சவரன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து நகைகள் பணத்துடன் தப்பி தலைமறைவாகினர்.

இதன் பிறகு, சிறிது நேரம் கழித்து சந்திரலேகா மயக்கம் தெளிந்து எழுந்துள்ளார். அப்போது, அங்குள்ள படுக்கை அறையில் பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து சந்திரலேகா திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு ஆவடி காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி, ஆய்வாளர்  அருணாச்சலராஜா ஆகியோர் விரைந்து வந்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வுசெய்தனர். மேலும் காவலர் குடியிருப்பிள் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும் சிசிடிவி கேமராவில் குற்றவாளியின் முகம் சரியாக இல்லை என தெரிகிறது.

ஊருக்கே உபதேசம் சொல்லும் காவல்துறையினர் தங்கள் குடியிருக்கும் பகுதியில் விழிப்புணர்வு இல்லாமலும் முறையான சிசிடிவி கேமராக்களை பொருத்தாமலும் இருப்பது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - கண்ணியப்பன்