மின் கட்டணம் கணக்கீடு : குழப்பம் தேவையில்லை - மின்வாரிய அதிகாரிகள் தகவல்

 


ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட வேண்டிய வீடுகளைச் சேர்ந்த மக்கள், குழப்பம் அடைந்துள்ளனர் ஆனால் குழப்பம் தேவையில்லை என மின்வாரிய அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்

கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் அந்த 2 வார காலத்திற்குள் மின் கணக்கீடு செய்ய வேண்டிய வீடுகளுக்கு மின் ஊழியர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது. 10ஆம் தேதிக்கு பிறகு கணக்கு எடுக்க வேண்டிய வீடுகளுக்கு ஊழியர்கள் கணக்கு எடுக்கச் செல்லவில்லை.

அதனால் 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே அத்தகைய நுகர்வோர் செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்தது. எனினும் இந்த 2 மாத மின்கட்டணத்தை விட 2019 கட்டணம் அதிகமாக இருந்தால் என்ன செய்வது என நுகர்வோர் மத்தியில் கேள்வி எழுந்தது.2019ம் ஆண்டு மே மாதத்தில் கூடுதலாக செலுத்தி இருந்தால் இப்போதும் கூடுதலாக செலுத்த வேண்டுமா என்றும் குழம்பினர்.

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மின்வாரியத்தினர் இது கூடுதல் கட்டணம் அல்ல என்றும் 2 மாதங்கள் கழித்து மின்கட்டண பதிவு கணக்கீடு மீண்டும் மேற்கொள்ளப்படும் என்றும் மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், 4 மாதத்திற்கான கணக்கை 2 ஆக பங்கிட்டு இலவச மின்சார அளவு கழிக்கப்படும் என்றும் இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றை கழித்துவிட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்