ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் காலனி!

 


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் பெயரில் கோவை மாவட்டத்தில் ஒரு காலனியே இருக்கின்றது. நீண்டநாட்களாக பட்டா இல்லாமல் தவித்த அந்த கிராம மக்களுக்கு கோவை ஆட்சியராக இருந்த உமாநாத் பட்டா வழங்கியதால் அவர் நினைவாக அந்த காலனிக்கு உமாநாத் பெயரை கிராம மக்கள் வைத்துள்ளனர்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவரது தனி செயலாளர்களில் ஒருவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர். உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியான உமாநாத் கோவை மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிந்தவர். கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாட்டை திறம்பட நடத்தி அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் பாராட்டு பெற்றவர். நேர்மையான, துணிச்சலான முடிவுகளை எடுக்க கூடியவர் என அதிகாரிகள் மட்டத்தில் பேசக்கூடிய நபராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமாநாத், கோவை மாவட்ட ஆட்சியராக பணியில் இருந்தபொழுது, கருமத்தம்பட்டி அருகே உள்ள விராலிகாடு பகுதியினை சேர்ந்த மக்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரி மனு அவரடம் அளித்தனர்.


30 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா கேட்டு மனு கொடுத்து போராடி வருவதாகவும், தங்களது கோரிக்கைகளை எந்த அதிகாரியும் செவிமடுக்கவில்லை எனவும் உமாநாத்திடம் முறையிட்டனர். இந்நிலையில் உமாநாத் அங்கிருந்த பொதுமக்களுக்கு உடனடியாக பட்டா கிடைக்க நடவடிக்கை எடுத்தார். 2011 ம் ஆண்டு விராலிகாடு பகுதியினை சேர்ந்த 80 குடும்பங்களுக்கு பட்டா வழங்கினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த கிராம மக்கள் தங்களுக்கு பட்டா கொடுத்த இடத்திற்கு "கலெக்டர் உமாநாத் காலனி" என்றே பெயர் சூட்டினர்.கடந்த 2011 ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக கலெக்டர் உமாநாத் காலனி என்றே அந்த பகுதி அழைக்கப்பட்டு வருகின்றது.


தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர்.உமாநாத், முதலமைச்சரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பதை அந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் தங்களுக்கு உதவியதை போல நிச்சயம் தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் செய்து கொடுப்பார் என அந்த காலனி மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்ற இது போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முக்கியமான பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு இருப்பதே புதிய அரசுக்கான பலம் என சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். வழக்கமாக அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பெயரில் காலனி, தெருக்களின் பெயர்கள் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் மக்களின் பிரச்சினையை தீர்த்து கொடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமாநாத் பெயரையே தங்கள் காலனிக்கு வைத்து நன்றி செலுத்துகின்றனர் கோவை பகுதி மக்கள்....

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!