“தவறை திருத்திக்கொள்ளுங்கள்; உயர்நீதிமன்ற கருத்தில் உள்நோக்கம் இல்லை” - உச்ச நீதிமன்றம்
கொரோனா பரவியதற்கு தேர்தல் ஆணையமே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டியது. மேலும், தேர்தல் ஆணையம் மீது ஏன் கொலைப்பழி சுமத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அப்போது, "கருத்துகளை சரியான முறையில் எடுத்துக்கொள்ளுங்கள். விளக்கத்தை கேட்காமல், வாய்ப்பு தராமல் சென்னை உயர்நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது" என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “தவறுகளை திருத்திக்கொள்ளவே நீதிமன்றங்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. பாடங்களை கற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் செய்த தவறை சரி செய்ய வேண்டும். உள்நோக்கத்துடன் உயர்நீதிமன்றம் கருத்து கூறவில்லை. கொரோனா காலத்தில் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் என்ன?” எனக் கேள்வி எழுப்பினர்.