இறுதியாக மனைவி முகத்தைப் பார்க்க பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜ்
உயிரிழந்த தனது மனைவியை கடைசியாக பார்க்க பிபிஇ கிட்டுடன் வந்திருக்கிறார் பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ்.
ராஜா ராணி, மான் கராத்தே, மரகத நாணயம், க/பெ.ரணசிங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அருண்ராஜா காமராஜ், பீட்சா, ஜிகர்தண்டா, காக்கி சட்டை, தெறி, கபாலி, காலா, மாஸ்டர், தர்பார் போன்ற பல படங்களில் பாடலாசிரியராகவும், பாடகராகவும் பணியாற்றியிருக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் 2018-ல் வெளிவந்த கனா படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ’ஆர்டிக்கிள் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சிந்துஜா மறைந்திருக்கிறார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அருண்ராஜா பிபிஇ கிட்டுடன் தனது மனைவியின் முகத்தை கடைசியாகப் பார்க்க வந்திருக்கிறார். அந்தப் படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.