பாலியல் விவகாரம்; நெல்லை சட்டக் கல்லூரி பேராசிரியர் தலைமறைவு!

 


நெல்லை அரசு சட்டக் கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவியை, அதே சட்டக் கல்லுாரி பேராசிரியர் ஒருவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்படுவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

இவர் 32 வயதான ரமேஷ் பாரதி. நெல்லை அரசு சட்டக் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராகப் பணியாற்றி வருபவர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரவுடிகளைப் போல் வாளால் கேக் வெட்டிய விவகாரத்தில் இவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது

இந்த நிலையில் தன்னிடம் பயிலும் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தற்போது சிக்கியுள்ளார். நடந்தது என்ன?

பாளையங்கோட்டை சாந்தி நகர் போலீஸ் காலனியைச் சேர்ந்தவர் 32 வயதான ரமேஷ் பாரதி. நெல்லை அரசு சட்டக் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் நாகர்கோவிலை சேர்ந்த 24 வயதான மாணவிக்குஆன்லைனில் பாடம் நடத்தி வந்துள்ளார். அவரது செல்போன் எண்ணை பெற்றுக்கொண்ட ரமேஷ் பாரதி அடிக்கடி அழைத்து நன்றாக படிக்குமாறும் பாடங்களில் சந்தேகம் ஏற்பட்டால் எந்த நேரம் வேண்டுமானாலும் கேட்கலாம் எனவும் கூறியுள்ளார்.

மாணவியை ரமேஷ் பாரதி ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி, மாணவியை நாகர்கோவிலில் விடுவதாகக் கூறி தனது காரில் ஏற்றியுள்ளார் ரமேஷ் பாரதி.

புறவழிச் சாலையில் ஓரிடத்தில் நிறுத்தியவர், மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்துள்ளார். மாணவி மயக்கம் அடைந்ததும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு நிற்காமல் அவரை அந்தரங்கமாக தனது செல்போனில் புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்துள்ளார்.

மயக்கம் தெளிந்த மாணவியிடம் நடந்ததை வெளியில் சொன்னால், அந்தரங்க படங்கள், வீடியோக்களை இணையதளங்களில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார். மேலும் கல்லூரியில் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.

பின்னர் மாணவியை நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு பேருந்தில் செல்லுமாறு சொல்லிவிட்டு ரமேஷ் பாரதி சென்று விட்டார். தனது நிலையை நினைத்து தொடர்ந்து மனஉளைச்சலுக்கு ஆளான மாணவிக்கு ரமேஷ் பாரதி செல்போன் மூலம் அழைத்து தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்; மீண்டும் தனது ஆசைக்கு இணங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

மனமுடைந்த மாணவி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து பேராசிரியர் ரமேஷ்பாரதி மீது நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனுவை அவர் அளித்துள்ளார்.

அதில் தன்னைப் போன்று பல மாணவிகளுக்கு ரமேஷ் பாரதி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார் எனவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

புகாரின் பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பேராசிரியர் ரமேஷ் பாரதி மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேராசிரியர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஏற்கனவே ரமேஷ் பாரதி தனது பிறந்தநாளின்போது, ரவுடிகளைப் போல் வாளால் கேக் வெட்டி கொண்டாடி அந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.அது தொடர்பாகவும் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.

நெல்லை அரசு சட்டக் கல்லூரியில் நிரந்தர பேராசிரியர்கள் மிக குறைந்த அளவிலேயே உள்ளனர். பெரும்பாலும் தற்காலிக ஆசிரியர்களை கொண்டே வகுப்புகள் நடத்தபப்டுகின்றன. அவர்களுக்கு கல்லூரியின் நற்பெயர் குறித்தும் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் கவலை இல்லை.

ரமேஷ் பாரதி வாளால் கேக் வெட்டிய சம்பவத்தன்றே அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகி இருந்திருக்காது என்கின்றனர் சட்டக் கல்லுாரியில் பயிலும் மாணவர்கள்.

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பேராசிரியர் கைது செய்யப்படுவாரா? கல்லுாரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?