நிரம்பி வழியும் கொரோனா நோயாளிகள் - பணிச்சுமையால் திணறும் மருத்துவர்கள்

 தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆனால், இவர்கள் அனைவருக்கும் சிகிச்சை தரும் அளவுக்கு போதிய மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லாத நிலை உள்ளது. இதனால் மருத்துவர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 2,42,000 கொரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகள் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவர்களுக்கு சிகிச்சை தர போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களோ, செவிலியரோ, ஆய்வகப் பணியாளர்களோ, தூய்மைப் பணியாளர்களோ இல்லை என மருத்துவ துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.


கொரோனா நோயாளிகள் எண்ணிக்கைப்படி பார்த்தால் தற்போதுள்ளதை விட 2 மடங்கு மருத்துவ பணியாளர்கள் தேவை என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத்.

தமிழகத்தில் தற்போதுள்ள 18,000 அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை போதாது எனவும், மருத்துவப் படிப்பை நிறைவு செய்து காத்திருக்கும் 15,000 மருத்துவர்களுக்கு பணி வழங்கி அவர்களையும் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்கிறார் ரவீந்திரநாத்.

முதுநிலை மருத்துவ மாணவர்கள் 12 முதல் 20 மணி நேரம் வரை தொடர் பணி செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும், இதனால் அவர்களும் தொற்றில் சிக்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மருத்துவர்களின் 5 மடங்கு பணிச்சுமையை குறைக்கவும் தரமான சிகிச்சை வழங்கவும் கூடுதலாக மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவது அவசியம் என்கிறார் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன்.

சென்னையில் மட்டும் 48,000 கொரோனா நோயாளிகளும் இது தவிர புற்றுநோய், விபத்து உள்ளிட்ட வேறு பல நோயாளிகள் ஆயிரக்கணக்கானோரும் மருத்துவமனைகளில் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு சிகிச்சை தர 4,612 மருத்துவர்கள் மட்டுமே பணியிலிருப்பதாக கூறுகிறது மருத்துவக் கல்வி இயக்குநரகம்.

மருத்துவத்துறை அமைச்சர் அண்மையில் அறிவித்தபடி 2,000 மருத்துவர்கள், 6,000 செவிலியர்கள், 2,000 ஆய்வக நுட்புனர்கள் என 10,000 மருத்துவப் பணியாளர்கள் நியமனம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடைபெற வேண்டும். இது நடந்தால் மருத்துவத் துறையினரின் பணிச்சுமை ஓரளவாவது குறைவதுடன் சிகிச்சையின் தரமும் உயரும் என்பது நிதர்சனம்