பசியால் வாடும் சாலையோர வாசிகள்; பசிபோக்க களமிறங்கிய திருநங்கையர்!

 


ஊரடங்கால் பசியால் வாடும் 500க்கும் மேற்பட்ட சாலையோர வாசிகளுக்கு சென்னையை சேர்ந்த திருநங்கைகள் குழு, உணவு வழங்கி வருவது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெறிச்சோடிய சாலைகள், மூடப்பட்ட கடற்கரைகள், முடங்கிக்கிடக்கும் வாழ்கை என அசாதாரண சூழலில், தொற்று பரவல் கொடியது என்றால், அதனினும் கொடியது உணவின்றி தவிப்பது. ஆம் நாம் வாழும் இதே சமூகத்தில்தான் உணவிற்காக எதிர்பார்க்கும் எளிய மக்களும் சாலையோரங்களில் வசிக்கின்றனர். அவர்களின் பசியறிந்து பசிப்போக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் இந்த புனிதர்கள்.

வடசென்னைக்கு ஒன்று, தென் சென்னைக்கு ஒன்று என "ஒருபிடி அன்பு" என்ற குழுவை ஏற்படுத்தி தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோருக்கு உணவு தயாராகிறது. தகவல் அறிந்து , திருநர் உணவுக்கூடத்திற்கு நாம் சென்றபோது அரசு பிறப்பித்த அத்தனை விதிமுறைகளையும், நேர்த்தியாக கடைபிடித்து சுத்தமான முறையிலும் உணவுக் கூடத்தில் சாலைவாசிகளுக்காக சிக்கன் பிரியாணி தயாராகிக்கொண்டிருந்தது.

பொருளாதாரம் ஒரு பெரும் சவாலாக இருப்பினும் இயன்றவரை சமாளித்து தங்களுக்கு வரும் வருமானத்தில் இல்லாதோருக்கு விருந்தோம்பல் படைக்கும் இவர்கள் சமைத்த உணவை தேடி சென்று பசித்தோறுக்கு வழங்குகின்றனர். தினமும் காலை மற்றும் இரவு என இருமுறை உணவு வழங்கப்படுகிறது.

சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என தொடங்கிய இந்த சேவை தற்போது ஊரடங்கு முடியும் வரை என்ற நிலைக்கு மாறியுள்ளது. இவர்களின் ஒருபிடி அன்பால் விரைவில் ஊரடங்கோடு கொரோனாவும் ஒழியட்டும்.