ரெம்டெசிவிர் மருந்தை கள்ளத்தனமாக விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பீலா ராஜேஷ்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளத்தனமாக விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒசூரில் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அரசு மருத்துவமனையை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளரும், கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான பீலா ராஜேஷ் நேரில் ஆய்வு நடத்தி, மருத்துவர்களிடம் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பீலா ராஜேஷ் கூறியதாவது, ஒசூர் அரசு மருத்துவமனையில் 275 படுக்கைகளில் 130 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒசூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன், தடுப்பூசி, PPE கிட் உள்ளிட்டவைகள் போதிய அளவில் உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூஜ்ஜியம் உயிரிழப்புகள் என்பதே இலக்கு எனவும், கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை, வீட்டு தனிமையில் உள்ளோர்களை கண்காணிப்பது, தடுப்பூசி செலுத்துவது என பணிகளை அதிகரித்து வருகிறோம் என்றார்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 974 படுக்கைகள் 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது வரை 67% படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரெம்டெசிவிர் மருந்தை கள்ளத்தனமாக விற்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆய்வின்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, மாவட்ட மருத்துவ பணிகளுக்கான இணை இயக்குனர் பரமசிவம், ஓசூர் தலைமை மருத்துவர் பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.