ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஊரங்கை மேலும் நீட்டிப்பதா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்.
அத்துடன், அனைத்துக் கட்சி உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக் குழுவின், முதல் கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, சடடப்பேரவையில் பிரதிநிதித்துவம் உள்ள அனைத்துக் கட்சியின் உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதில், திமுக சார்பில் மருத்துவர் எழிலன், அதிமுக சார்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், மதிமுக சார்பில் மருத்துவர் சதன்திருமலைக் குமார் உட்பட13 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வருகின்ற சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. அப்போது, கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது மற்றும் ஊரடங்கை நீட்டிப்பதா என்பது குறித்து விவாதிக்கப்படட உள்ளது.
கடந்த சில நாட்களாக 33 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருவதால், ஆக்சிஜன் தேவை 650 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு கூடுதலாக தினசரி 180 டன் ஆக்சிஜன் அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு கோரிக்கை மனு அளித்தார்.
மேலும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அங்கிருக்கும் ஆக்சிஜனை தமிழகத்துக்கு வழங்க கோரினார். இதனை பரிசீலித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அடுத்த 5 நாட்களுக்கு தேவையான 900 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்துக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் தொடர்பாக மராட்டியம் மற்றும் தமிழக அதிகாரிகள் கலந்து பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பியூஷ் கோயல், டி.ஆர் பாலுவிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது