சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவத்தை கையிலெடுங்கள்... தமிழக அரசுக்கு தங்கர் பச்சான் கோரிக்கை


 தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதால்  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க  மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு பாரம்பரிய முறையிலும் சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என தங்கர் பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ’நிலைமை கை மீறி சென்றுவிட்ட நிலையில் ஊரடங்கு என்பது தற்போதைய சூழலில் கட்டாயமான ஒன்றுதான் என்றும்  ஊரடங்கினாலோ அதை தொடர்ந்து நீடிப்பதினாலோ கொரோனா இரண்டாம் அலையிலிருந்து மீண்டுவிட முடியாது.

ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து தருவதினாலோ நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கைகளை மேலும் மேலும் அதிகப்படுத்துவதினாலோ இழப்பிலிருந்து முழுமையாக மீள முடியாது என்றும் கூறியுள்ளார். நிலைமையின் தீவிரத்தை தொலைநோக்கு பார்வைகொண்டு உணராமல் கட்டமைப்புகளை உருவாக்காமல் போனதன் விளைவே இத்தகைய நிலைமைக்குக்காரணம் என்றும் தங்கர் பச்சான் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “நோய் தாக்கி மருத்துவம் மேற்கொள்ளாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது. அரசு மருத்துவமனைகளிலோ இடமில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் இப்பொழுது இதே நிலைதான். தனியார் மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் நோய் கண்டறியவே இரண்டாயிரம், மூன்றாயிரம் என அவரவர்களின் விருப்பத்திற்கேற்றபடி வசூலிக்கின்றனர்.

எட்டாயிரம், பத்தாயிரம் என நுரையீரல் சோதனைக்காக பெறுகின்றனர். இவை தொடர்பான மற்ற இரத்த சோதனைகளுக்கும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான கோடிகள் மக்களிடமிருந்து மருத்துவ சோதனை எனும் பேரில் கொள்ளையடிக்கப்படுகின்றன” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

பணம் படைத்தவர்களால் எப்படியும் வாழ்ந்துவிட முடியும். மாத ஊதியத்தை நம்பியும், வெறும் கை கால்களைக்கொண்டும் நாள் தோறும் உழைத்து வாழும் மக்களின் துயரங்கள் சொல்லி மாளாது என தெரிவித்துள்ள தங்கர் பச்சான், தொடக்கத்திலேயே நோயைக்கண்டறிந்து மருத்துவம் மேற்கொண்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை உருவாகாது. புதிய அரசு மிக விரைவாக நிலைமையை சமாளித்து நோய்ப்பரவலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் இதைச் செய்வது அவசியம்’ என கூறியுள்ளார்.

நோய் முதன்முதலாக கண்டறியப்பட்ட சீன நாடு இன்று மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அவர்கள் கையாண்ட பல தலைமுறைகள் கையாண்ட பாரம்பரிய மருத்துவத்தை ஆங்கில மருத்துவத்துடன் இணைத்து கொரோனாவை முற்றிலுமாக ஒழித்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள தங்கர் பச்சான், இந்திய அரசும் இதனை செய்திருக்க வேண்டும் என்றும் இவ்வளவு  பேரழிவை சந்தித்த பிறகும் மேலும் மேலும் தயங்குவதன் நோக்கம் தான் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம் ஆகிய மூன்றையும் இணைத்து, இதில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களை கொண்ட உடனடி மருத்துவ மையங்களை தமிழகத்தில் உருவாக்கலாம் என  யோசனை தெரிவித்துள்ள தங்கர் பச்சான், ’இதைச்செய்தாலே தொடக்க நிலையிலேயே கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து விடும்.உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு மருத்துவ மனைகளைத்தேடி தஞ்சமடைய வேண்டி இருக்காது”  என்று  கூறியுள்ளார்.

பீதியில் உறைந்து கிடக்கும் மக்களுக்காக அரசு இக்கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து நோயிலிருந்தும் உயிர் இழப்பிலிருந்தும் காப்பாற்ற வேண்டும்  என்றும் தங்கர் பச்சான் வலியுறுத்தியுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்