கடந்த வருட இறுதியில் ஹைதராபாத்தில் ’அண்ணாத்த’ படப்பிடிப்பு நடத்தப்பட்டது. எனினும் அண்ணாத்த படப்பிடிப்புத் தளத்தில் நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதையடுத்து ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லையென்றாலும் ரஜினிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ரஜினிகாந்தின் பாதுகாப்பு கருதி, அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதன் பிறகு மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் 8-ஆம் தேதி தனி விமானத்தில் சென்னையிலிருந்து ஹைதரபாத்துக்குச் சென்றார் ரஜினி.
கடந்த 10-ஆம் தேதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது ஐதராபாத்தில் இருந்து, தனி விமானம் மூலம் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் நடிகர் ரஜினிகாந்த்.
அங்கிருந்து கார் மூலம் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றார்.
அண்ணாத்த படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.