ஹெச்.ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்
நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்புவதாக ஹெச்.ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை கொலை செய்யப்பட்டதாகவும், அதற்கு பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாதான் காரணம் என்றும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஹெச்.ராஜா அண்மையில் கூறியிருந்தார். நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன் இயற்கையாக மரணம் அடைந்ததாகவும், அவதூறு பரப்பும் வகையில் ஹெச்.ராஜா பேசி வருவதாகவும் கூறி அவர் மீது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அவதூறு கருத்துகளை பரப்பிவிட்டு மன்னிப்பு கோருவதை ஹெச்.ராஜா வழக்கமாக கொண்டுள்ளதாகவும், இந்தமுறை மன்னிப்பு கேட்டாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. ஹெச்.ராஜா மீது தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜவாகிருல்லா மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது அவதூறு பரப்பும் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.