தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட எம்எல்ஏக்கள்!

 


சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. பேரவை நிகழ்வை திருக்குறள் வாசித்து தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து உழைத்து உயர்ந்தவர் திமுக தலைவர் என்று முதலமைச்சருக்கு சபாநாயகர் புகழாரம் சூட்டினார். அப்போது, அமைச்சர்களுக்கு மட்டுமே இருக்கை ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், மற்ற உறுப்பினர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.


ஆளுநரிடம் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டதால் தற்காலிக சபாநாயாகர் சட்டமன்ற உறுப்பினர் பதிவேட்டில் முதலில் கையொப்பம் இட்டார். இதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என உளமாற உறுதி ஏற்கிறேன் என்று எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் உளமாற உறுதியேற்பதாக கூறி எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்கொண்டனர்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏவாக பதவியேற்றதை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடவுள் அறிய என்று கூறி எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, பா.ம.க சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணி, பா.ஜ.க சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் உறுதிமொழி வாசித்து எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றனர்.

பின்பு முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சபாநாயகராக பொறுப்பேற்கவுள்ள அப்பாவு ஆகியோர் எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றனர். மேலும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடவுள் அறிய என்று கூறி எம்எல்ஏவாக பொறுப்பேற்றார்.

இதன் பின்பு முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றதை தொடர்ந்து அவையில் உள்ள மற்ற உறுப்பினர்கள் அகர வரிசைப்படி எம்.எல்.ஏவாக உறுதிமொழி வாசித்து பொறுப்பேற்றுக் கொண்டனர். முதல்முறையாக திமுக சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள திமுக இளைஞர் அணிச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏவாக பொறுப்பு ஏற்க அழைக்கப்பட்டபோது திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் மதிவேந்தன் ஆகியோர் இன்றைய பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை. மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயகபாஸ்கர், மூத்த உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், இசக்கி சுப்பையா ஆகியோரும் பங்கேற்கவில்லை.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்