கொரோனா பரவல் எதிரொலி: சென்னையில் ஒவ்வொரு வட்டத்திலும் புது வியூகங்கள் வகுக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

 


சென்னை தண்டையார் பேட்டை மண்டல அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எபிநேசர், ஆர்.டி.சேகர், ஐட்ரீம்ஸ் மூர்த்தி உள்ளிட்டோறும், தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கொரனோ தடுப்பு பிரிவு அதிகாரிகள், உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்தும், தொற்று பரவலை கட்டுப்படுத்தல் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,

மண்டல வாரியாக சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்ற கொரோனா தடுப்பு கலந்தாய்வு கூட்டம் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுகைகளை தயார் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்.

கொரோனவால் உயிர் இழப்பவர்கள் உடல்கள் நல்ல முறையில் அடக்கம் செய்வது குறித்து மண்டலத்திற்குரிய இடுகாடுகளை பார்வையிட்டு அடக்கம் செய்வதற்கான பணிகளையும் ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னையில் வட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் கணக்கெடுக்கப்பட்டு எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு ஏற்றார்போல் தனிமைப்படுத்துவதற்கும், சிகிச்சைக்கும் அளிப்பதற்கு, தேவையான ஊழியர்களை, கள பணியாளர்களை நியமிக்க ஆலோசித்து உள்ளோம்.

எந்த பகுதிகல்கள் நோய்த் தொற்று அதிகம் இருக்கிறதோ அந்தப் பகுதியில் நோய்த் தொற்றைக் குறைக்க சென்னை மாநகராட்சியும் மருத்துவத் துறையும் இணைந்து செயல்படும். ஒவ்வொரு வட்டத்திலும் தொற்று பரவலின் தன்மைக்கேற்ப வியூகங்கள் அமைத்து கட்டுப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது