பதவியேற்ற கையோடு கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டும் முதல்வர்!


 தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் சூழலில், கொரோனா பரவலைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து தீவிரமான பணிகளை மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாளே, தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், வருவாய்துறைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் பிற சுகாதாரத்துறை அலுவலர்களோடு தனது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட நிலையில், தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்குவது உள்ளிட்ட 5 திட்டங்களைக் கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 864 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த கொரானா சிகிச்சை மையத்தில் 11 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை 800 ஆக்சிஜன் படுக்கைகளும் 64 சாதாரண படுகைகளும் கொண்டது. அதனை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னுரையாக பேசிய தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின், “நமது மாநிலம் இதுவரை சந்தித்திடாத இக்கட்டான சூழலில் தமிழக மக்களை காப்பாற்றும் பொறுப்பு இந்த அரசிற்கு உள்ளது.

தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை எட்டியுள்ளது. நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். தடுப்பூசி செலுத்துகிறவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவாக உள்ளது. அதை முன்னிலைக்கு கொண்டு செல்ல உழைக்க வேண்டும்.

ரெம்டெசிவர் மருந்து, ஆக்சிஜன் போதுமான அளவு கிடைப்பதை அனைத்து மருத்துவமனை மருத்துவர்களும் உறுதி செய்ய வேண்டும். இறப்புகளை குறைத்திட மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடி வருகின்றனர்.

ஒரு சில மாவட்டங்களில் தொற்று அளவு கூடுதலாக உள்ளது. அந்தப் பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)