அத்துமீறல் குற்றங்களில் ஒருதலைப்பட்சமாக செயல்படும் திமுகவினர்..? சென்னை பள்ளி விவகாரம் உணர்த்தும் பாடம் இது தான்..!
சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்களில் அரசியல்வாதிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக சர்ச்சை வெடித்துள்ளது.
சென்னையின் கே.கே நகரில் செயல்பட்டு வரும் பிஎஸ்பிபி பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலும், துன்புறுத்தலும் செய்ததாக, அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது முன்னாள் மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், இவர் மீது பள்ளி நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த விவகாரம் பூதாகரம் ஆன நிலையில், பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாலியல் புகாருக்குள்ளான ஆசிரியர் ராஜகோபாலனை சஸ்பெண்ட் செய்து பத்மா சேஷாத்ரி பள்ளியின் டீன் ஷீலா ராஜேந்திரா மற்றும் பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், மாணவர்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து விசாரணை நடத்தி வரும் ஆயிரம் விளக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியரின் செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, திமுக எம்பி கனிமொழி இந்த விவகாரம் குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ளதோடு, பெண்கள் மீதான பாலியல் கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியர் மட்டுமல்லாது, இந்த புகாரை முறையாக விசாரிக்காத பள்ளி நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கனிமொழியின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு சின்மயி ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சின்மயி, தான் மற்றும் 16 பெண்களிடம் கவிஞர் வைரமுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்தும் நடவடிக்கை எடுக்க ஆதரவளிக்க வேண்டும், நிச்சயம் ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சின்மயி #MeToo விவகாரத்தை கிளப்பி கோலிவுட்டில் கவிஞர் வைரமுத்து பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவது குறித்து பரபரப்பான புகார்களை முன்வைத்திருந்தார். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் குறிப்பாக திமுகவினர் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. பெண்ணியதத்திற்கு ஆதரவாக பேசுவதாகக் கூறும் கனிமொழி கூட ஒரு ஆதரவு பதிவோ அல்லது விசாரித்து நடவடிக்கை எடுக்கவோ வலியுறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
பிஎஸ்பிபி பள்ளி பிரபல நகைச்சுவை நடிகர் ஒய்.எஸ்.மகேந்திரனின் மனைவியுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திமுகவினர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் என்றால் மட்டும் தான் பரபரப்பாக பேசுமா என சமூக ஊடகங்களில் திமுகவினர் மீதும் கனிமொழி மீதும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
மேலும், இந்த விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் மட்டுமல்லாது வேறு சில ஆசிரியர்களுக்கும் பங்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஸ்கிரீன்ஷாட் பதிவுகளில் இசை ஆசிரியர் வசந்த் பீட்டர் செய்த பாலியல் அத்துமீறல் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அரசியல் செய்யாமல் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் அனைவரின் எண்ணமாகவும் உள்ளது.