நிலோபர் கஃபீல்உதவியாளர் சொல்வது என்ன?

 நிலோபர் கஃபீல் மீது புகார் கொடுத்த பிரகாசத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` நான் அவரிடம் ஐந்து ஆண்டுகளாக உதவியாளராக இருந்து வந்தேன். தொழிலாளர் நலத்துறை தொடர்பான பணிகளில் அவர் நேரடியாக பணம் வாங்க முடியாது என்பதால், என்னை வாங்கிக் கொள்ளச் சொல்வார். அந்தப் பணத்தை கோவையைச் சேர்ந்த அவரது உறவினர் ஜாபர் மற்றும் மகன், மருமகன், சம்பந்தி ஆகியோரிடம் கொடுப்பேன். அதனால் சில வேலைகள் நடந்தன. சில வேலைகள் நடக்காமல் போய்விட்டன.

கடைசியில் அவருக்கு தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. இதனால் அவரிடம் வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் எல்லாம் நெருக்குதல்கள் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். அவரிடம் கேட்டபோது, `நம்ம அரசுதான் வரும்' எனக் கூறி வந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பணம் கொடுத்தவர்கள் எல்லாம் என்னை மிரட்டத் தொடங்கினர்.

நிலோபரிடம் கேட்டபோது, `பார்த்துக் கொள்ளலாம்' என்று தொடர்ந்து கூறி வந்தார். அவரிடம் பணம் உள்ளது. பணம் கொடுக்கிறேன் என்றுதான் கூறிவந்தார். நாளடைவில் அவருடைய போக்கு மாறிவிட்டது. இந்த சம்பவத்தால் மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகிவிட்டேன். அவருடன் இருந்த வரையில் என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார். பணத்தை அவர் செட்டில் செய்துவிட்டால் மன உளைச்சலில் இருந்து தப்பித்துவிடுவேன்" என்கிறார்.

10 பக்க புகார்

`நிலோபர் பணம் வாங்கினார் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?' என்றோம். `` நான் ஒரு வேலைக்காரன்தான். அவர் பணம் வாங்கிக் கொடு என்றால், வாங்கிக் கொடுப்பேன். எந்த ஒரு துண்டுச் சீட்டிலும் எழுதி வைத்துக் கொள்வதைக்கூட அவர் விரும்ப மாட்டார். அவர் மீதான நம்பிக்கையில்தான் பணம் வாங்கிக் கொடுத்தேன். இதுதொடர்பாக, போலீஸ் டி.ஜி.பியிடம் புகார் மனு கொடுத்துள்ளேன். எனது புகாரின்பேரில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

காவல்துறை தலைமை இயக்குநரிடம் பிரகாசம் அளித்துள்ள 10 பக்க புகார் மனுவில், ` "2016 சட்டமன்றத் தேர்தலில் நிலோபர் கஃபீலுக்கு பணரீதியாக உதவி செய்ததால், என்னை அரசியல் உதவியாளராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதால், அவரிடம் பணி செய்து வந்தேன். இந்நிலையில், அமைச்சரின் துறை சார்ந்த தொழிலாளர் நலத்துறையில் வேலைக்காகவும் தமிழ்நாடு வக்ஃபு வாரியம் சார்ந்த வேலைக்காகவும் சிலர் என்னிடம் அமைச்சர் கொடுக்கச் சொன்னதாக காசோலை மற்றும் ரொக்கமாகப் பணம் கொடுத்தனர்.

என் வங்கிக் கணக்கிற்கு பணப் பரிமாற்றம் நடைபெற்ற பின்பு அமைச்சர் யாருடைய வங்கிக் கணக்குக்கு பணப் பரிமாற்றம் செய்ய உத்தரவிடுவாரோ, அந்த வங்கிக் கணக்குக்குப் பணத்தை பரிமாற்றம் செய்வேன். இந்தப் பணத்தை அவருடைய குடும்ப நபர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர் சொல்லும் நபர்களிடம் அவர் முன்னிலையில் கொடுத்து வந்தேன்.

ஆனால், அரசுத் துறையில் எந்த வேலைகளும் நடக்காததால் பணம் கொடுத்தவர்கள் என்னிடம் நேரில் கேட்டனர். இதற்கு, `கொரோனா தொற்று நோய் அதிகமாக இருப்பதால் அரசாங்கத்தால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை என நிலோபர் கூறிவந்தார்" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலோபர் நீக்கப்பட்டது ஏன்?

மேலும், "சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்காததால், பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இதில், வெள்ளகுட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயசுதா, செல்வமணி ஆகியோர் அமைச்சரும் நானும் 8 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக வாணியம்பாடி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வந்தது தெரியவந்தது. இதையறிந்த நிலோபர் கஃபீல், நான்கு லட்சத்தை மட்டும் அவர்களுக்கு கொடுத்துவிட்டு, மீதி பணத்தை ஒரு மாதத்திற்குப் பிறகு தருவதாக கூறினார்.

இதன்பின்னர், அம்பூர்பேட்டை ஜெகதீசன் என்பவர் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஆன்லைன் மூலம் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக, நிலோபர் கஃபீலிடம் பேசியும் எந்தப் பதிலும் இல்லை. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.கடந்த மே மாதம் 3 ஆம் தேதி காவல்துறை தலைமை இயக்குநரிடம் இந்தப் புகார் மனுவை பிரகாசம் அளித்துள்ளார். இதன்பேரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்பதை அறிந்தே, நிலோபரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே அ.தி.மு.க தலைமை நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீலிடம் பேசுவதற்குத் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இறுதியில், பேசிய அவரது உறவினர் பெண் ஒருவர், `` வழக்கறிஞர்களுடன் அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது பேசும் சூழலில் அவர் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் அவர் ஊடகங்களிடம் பேசுவார்" என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)