மத்திய அரசிடம் இருந்து வந்தால் தான் அடுத்த கட்டமாக தடுப்பூசி செலுத்த முடியும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை மேலும் ஒருவாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால், கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் இது தற்காலிக தீர்வாக மட்டுமே உள்ளது. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே, கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும். இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முதலைமச்சர் ஸ்டாலின் துரிதப்படுத்தியுள்ளார். இதற்காக தடுப்பூசிகளை எப்படியெல்லாம் கொள்முதல் செய்யலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்னும் இரண்டு நாட்களுக்கான தடுப்பூசி மட்டுமே கையிருப்பு உள்ளது. மத்திய அரசிடம் இருந்து வந்தால் தான் அடுத்த கட்டமாக தடுப்பூசி செலுத்த முடியும் என்று கூறினார்.
மேலும், 3.50 கோடி தடுப்பூசி பெற தமிழக அரசு கோரியுள்ள உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் 5ம் தேதி திறக்கப்பட்ட பின்னரே எந்த நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்பது குறித்து தெரிய வரும் என்றும் தெரிவித்துள்ளார்.