ரெம்டெசிவிர் விற்பனை இல்லை என்பது தெரியாமல் கூடிய கூட்டம்; மருந்து கேட்டு போலீசாரிடம் கதறிய பெண்கள்!

 


தமிழகம் முழுவதும் இன்று ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கிடையாது என்பதை அறியாமல் திருச்சியில் மருந்து வாங்க கூட்டம் கூடியது. போலீசார் அவர்களை கலைந்து செல்லும் படி கூறியதையடுத்து, அங்கிருந்த சில பெண்கள் போலீசாரிடம் கதறி அழுது மருந்து கேட்டது காண்போரை கலங்க வைத்தது.

திருச்சி மிளகுப்பாறையில் உள்ள அரசு இயன்முறை (பிசியோதெரபி) மருத்துவக் கல்லூரியில் கடந்த 8ம் தேதி முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. கொரோனா பரிசோதனை முடிவு, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு, உள்ளிட்டவற்றுடன், மருந்து வாங்க வரும் நோயாளிகளின் உறவினர்களின் ஆதார் அட்டைகளைக் காட்டி ரெம்டெசிவிர் பெற்றுக் கொள்ளலாம்.

ரெம்டெசிவிர் கொரோனாவைத் தடுக்கும், உயிர் காக்கும் மருந்தல்ல என்று அரசு மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து ரெம்டெசிவிர் கேட்டு, பரிந்துரை செய்யப்படுகிறது.

இதையடுத்து திருச்சி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மருந்து வாங்க முண்டியடித்துக் கொண்டு நோயாளிகளின் உறவினர்கள் காத்திருந்தனர். திருச்சியில் தினமும் 300க்கும் மேற்பட்டோர் காத்திருந்தாலும் 50 முதல் 60 நபர்களுக்கு மட்டுமே மருந்து வழங்கப்பட்டது. பலரும் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர். நேற்றைய தினம் விடுமுறை என்பதால் விற்பனை செய்யப்படவில்லை.

இந்நிலையில், திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் ரெம்டெசிவிர் மருந்து இன்று முதல் (17ம் தேதி) விற்பனை செய்யப்படாது. அதற்கு பதில், நாளை முதல் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர்  வழங்கப்படும்' என்று அரசு அறிவித்தது.

எனினும், இதனை அறியாத, 200க்கும் மேற்பட்டோர், திருச்சி பிசியோதெரபி கல்லூரி முன்பு நேற்றிரவு முதல், சாலையோரம் காத்துக் கிடந்தனர். தொடர்ந்து, இன்று காலை 9.15 மணிக்கு அங்கு வந்த, வருவாய் கோட்டாட்சியர் விசுவநாதன், காவல் உதவி ஆணையர் மணிகண்டன் ஆகியோர், 'இன்று மருந்து விற்பனை இல்லை. நாளை முதல் அந்தந்த மருத்துவமனைகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று மைக்கில் அறிவித்தனர்.

அதைகேட்டு அதிர்ச்சியடைந்து பலரும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். ஆனால் சிலரோ, அங்கிருந்து கிளம்பவில்லை. மாற்று அறிவிப்பு வரும், மருந்தை வாங்கிச் செல்லலாம் என்று நம்பி நின்றனர். குறிப்பாக பெண்கள், 'மருந்து வாங்கி செல்லாவிட்டால் தங்களது உறவினர் உயிரிழந்து விடுவார்கள்' என்று கூறி போலீசாரின் காலில் விழுந்து, கண்ணீர் விட்டு கதறியழுதனர். சிலர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களை சமாதானப்படுத்திய வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் 'நாளை நிச்சயமாக அந்தந்த மருத்துவமனைகளிலேயே மருந்து கிடைக்கும்' என்று கூறி அனுப்பி வைத்தனர். நாளை மருந்து கிடைக்கும் ஆனால், 'இன்று அவசியத் தேவையாக இருக்கும் நோயாளிகளின் நிலை என்னவாகும்? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அதேநேரத்தில், தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்தை பலமடங்கு கூடுதல் விலைக்கு விற்பார்கள் என்ற அச்சமும் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே இன்றைய தேவைக்கு மருந்து கொடுக்க வலியுறுத்தினர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)