மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 


தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல், கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.


தொடர்ந்து, ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தடுக்க தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கப்பட்டது.

பொதுமக்களின் கூட்டம் அதிகரித்ததால், சில தினங்களில் மருந்து விற்பனை அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. மேலும் மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி மாவட்டங்களிலும் மருந்து விற்பனை தொடங்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களின் கூட்டம் குறையாததால், மருந்து விற்பனை நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு மாற்றப்பட்டது. நேற்றைய தினம் நேரு அரங்கத்திலும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசைக்கூட்டம் நடைபெற்றது. இதில், தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். தற்போது அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தமிழக மருத்துவ சேவைக் கழகம் மூலமாக போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில், அதிக கூட்டம் கூடுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதால், அதனை தவிர்க்க வேண்டியுள்ளது.

இதனால், பொது மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், தற்போதுள்ள முறையை மாற்றி, மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்தை வழங்கிட வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். மேலும், நோயாளிகளின் குடும்பத்தினருக்கு இந்த மருந்தை வாங்குவதற்கான சீட்டை அளித்து, அவர்களை வாங்கிடப் பணிக்கும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இதன்படி, வரும் மே 18ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த கோரிக்கைகளை பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்கு சென்று ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு வழங்கப்படும் மருந்துகள் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதையும், பெறப்படும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு அவை விற்பனை செய்யப்படுவதையும், தவறான முறையில் கள்ளச் சந்தையில் இவை விற்பனை செய்யப்படாதவாறும் சுகாதாரத்துறை அலுவலற்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். நோயாளிகளுக்கு தேவையற்ற முறையில் மருந்துச் சீட்டு அளிக்கும் மருத்துவனைகள் மீதும், மேற்கூறிய விதிமுறைகளை மீறுவோர் மீதும், சட்டப்படியான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)