திரிணாமூல் அமைச்சர்கள் கைது: சிபிஐ அலுவலகத்துக்கு விரைந்த முதல்வர் மம்தா

 


நாரதா லஞ்ச ஊழல் வழக்கில் திரிணாமூல் மூத்த தலைவர்களுக்கு எதிராக சிபிஐ சட்ட நடவடிக்கை எடுக்க மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அனுமதியளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை சிபிஐ மேற்கொண்டுள்ளது.

சமீபத்தில் மேற்கு வங்க தேர்தல்கள் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களைக் கைப்பற்ற பாஜக 77 இடங்களைக் கைப்பற்றியது.

இந்நிலையில் திடீர் சிபிஐ நடவடிக்கை மற்றும் டிஎம்சி தலைவர்கள் கைதினால் மம்தா ஆடிப்போயுள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் போலி நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகளுக்கு சாதகமாக நடப்பதாகக் கூறி அவா்களிடம் லஞ்சமாக பணம் பெறும் காட்சிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக வெளியாகின.

இதனை ரகசிய நடவடிக்கையாக நாரதா இணையதள செய்தி நிறுவனம் படம்பிடித்தது. இதுதொடா்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட போது மாநில அமைச்சா்களாக இருந்த திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி, மதன் மித்ரா, சோவன் சட்டா்ஜி ஆகிய நால்வா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மாநில ஆளுநா் ஜக்தீப் தன்கரிடம் சிபிஐ அனுமதி கோரியிருந்தது. அதன் அடிப்படையில் நால்வா் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
இதில் முன்னாள் கொல்கத்தா நகர மேயர் சோவன் சாட்டர்ஜியையும் கைது செய்தது சிபிஐ. சோவன் சாட்டர்ஜி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்குத் தாவி பிறகு தனக்கு தேர்தலில் டிக்கெட் தராததால் பாஜகவிலிருந்தும் விலகினார்.

கைது செய்யப்பட்ட பிர்ஹாத் ஹக்கிம் கூறும்போது, “விசாரணைக்கு எனக்கு பயமில்லை, நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் நாங்கள் நிரபராதிகள் என்று நிரூபிப்போம். பாஜக தேவையில்லாமல் இது போன்ற அவதூறு செய்கைகளில் ஈடுபட்டு வருகிறது” என்றார்.

திரிணாமூல் மூத்த தலைவர்கள் கைதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.