சென்னையில் கால் டாக்சிகள் ஆம்புலன்ஸ்களாக மாற்றம்;ஆம்புலன்ஸ்களுக்கு தட்டுப்பாடு எதிரொலி
சென்னையில் ஆம்புலன்ஸ்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், லேசான அறிகுறி உள்ளவர்களை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்ல கார் ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் கிடைக்காமல், ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் மரணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ்களின் தேவை அதிகரித்துள்ள சூழலில், அந்த வாகனங்களுக்கான பளுவை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக 250 கால் டாக்சிகளை, ஆம்புலன்ஸ்களாக மாற்றியுள்ளது சென்னை மாநகராட்சி. இந்த சேவையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 50 கார் ஆம்புலன்ஸ்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
லேசான அறிகுறியுடன் நோய் தொற்றுக்கு ஆளானவர்கள், வீட்டு தனிமையில் இருப்பவர்களை மருத்துவமனை, கொரோனா கவனிப்பு மையங்களுக்கு அழைத்து செல்ல இந்த கார் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுவாமிநாதன் கூறும்போது, ஊரடங்கால் வேலைவாய்ப்பின்றி இருந்த நிலையில், மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ள கார் ஆம்புலன்ஸ் சேவை, தங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர் என்றார்.