கொரோனா அறிகுறிகளாக இருக்கலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!
சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டன்,இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உருமாறிய கொரோனா வகைகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை தற்போது பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
காய்ச்சல், இருமல், சோர்வு, மூச்சி திணறல் ஆகியவை முதல் அலையின்போது அறிகுறிகளாக கூறப்பட்டன. தற்போது இரண்டாவது அலையில் நுரையீரல் பாதிப்பு போன்ற தீவிர அறிகுறிகளும் காணப்படுகின்றன. இந்நிலையில், கோவிட் டங்க் எனப்படும் புதியவகை அறிகுறிகளை பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கோவிட் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர் ஜி.பி.சத்தூர் இது குறித்து கூறுகையில், உயர் ரத்த அழுத்தம் உள்ள 55 வயது நபர் தன்னை சந்தித்ததாகவும் அவரது வாயில் வறட்சி இருப்பதாக கூறியதையடுத்து சோதனை செய்துபார்த்தபோது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானதாகவும் தெரிவித்துள்ளார்.
நோயாளியின் ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்தபோது சீராக இருந்ததாகவும் ஆனால், ரத்தத்தில் உள்ள எரித்ரோசைட் படிவு விகிதம் அதிக அளவில் இருந்ததாகவும் கூறும் ஜி.பி. சத்தூர், காய்ச்சல் இல்லாதபோதும், சோர்வாக இருப்பதாக அந்த நபர் கூறியதால், சோதனை செய்து பார்த்தபோது கொரோனா இருப்பது தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்ததாக ஜி.பி.சத்தூர் கூறியுள்ளார்.
அந்த நோயாளிக்கு நாக்கு வறட்சி, நாக்கு அரிப்பு இருந்தபோதிலும் கொரோனாவின் பிற அறிகுறிகள் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாறிய கொரோனா வகை, இங்கிலாந்து, பிரேசில் நாட்டில் கண்டறியப்பட்ட புதியவகை கொரோனா காரணமாக இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டிருக்கலாம் என்று சத்தூர் தெரிவித்துள்ளார். கொரோனாவின் இந்த புதிய அறிகுறியின் பின்னணி குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.