அப்பாவு... யார் இவர்?சபாநாயகர் ஆகும் திமுக தேர்ந்தெடுத்தது ஏன்?
1996ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ராதாபுரம் தொகுதியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் அப்பாவு. பின்னர் அதே தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி வாகை சூடி, 2001- 2006-ம் ஆண்டிலும் எம்.எல்.ஏ.வானார்.
பின்னர் அவர் தி.மு.க.வில் சேர்ந்து 2006-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். அந்த முறையும் எம்.எல்.ஏ.வாகி அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்கள் பணியாற்றினார். next ஆனால் 2011-ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சிக்கு வழங்கப்பட்டது.
அதன்பிறகு 2016-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. சார்பில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு போட்டியிட்டார். அதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் இன்பதுரையிடம் அப்பாவு வெற்றியை பறிகொடுத்தார். ஆனால் இந்தத் தேர்தலில் 203 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து சர்ச்சைக்குரிய 3 சுற்றுகளில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்துக்கும் சென்ற இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில், நடைபெற்று முடிந்த தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இன்பதுரையைவிட 5,925 வாக்குகள் கூடுதலாக பெற்று அப்பாவு வெற்றிபெற்றுள்ளார்.
தென் மாவட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர் அப்பாவு என்ற பெருமையோடு அப்பகுதியில் வலம்வரும் இவர். பெப்சி மற்றும் கோலா நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதை கடுமையாக எதிர்த்தார்.
மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில், நெல்லை மாவட்டத்தில் இருந்து யாரும் இடம்பெறாத நிலையில், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு, சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
திமுக சார்பில் சபாநாயகர் தேர்தலில் அப்பாவும், துணை சபாநாயகர் தேர்தலில் கு.பிச்சாண்டியும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி நேற்று அறிவித்தது. சபாநாயக் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் திமுகவுக்கு பெரும்பான்மை உள்ளதால், அப்பாவு சபாநாயகராகவும், பிச்சாண்டி துணை சபாநாயகராகவதும் உறுதியாகியுள்ளது.