அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் மீது திமுக பிரமுகர் சரமாரி தாக்குதல்!
திருவள்ளூர் அருகே நியாயவிலைக் கடையில் தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாயை வழங்குவதில் போட்டாபோட்டி ஏற்பட்டது.. திமுக ஆட்சியில் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் எப்படி வழங்கலாம் என ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கே சென்று திமுக பிரமுகர் ஊராட்சித் தலைவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சீனிவாசன், அதிமுகவைச் சேர்ந்தவர் . இப்பகுதியில் உள்ள இரண்டு நியாயவிலைக் கடைகளில் தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி நான்காயிரம் ரூபாய் நிவாரணத் தொகையில் முதற்கட்டமாக 2 ஆயிரத்தை பொதுமக்களுக்கு வழங்கும் பணி நடைபெற்றது இதனை இரண்டு நியாய விலை கடை களிலும் திமுகவினர் தாங்கள்தான் வழங்குவோம் என்று ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே ஒரு சில நபர்களுக்கு 2000 ரூபாய் வழங்கி விட்டு திமுகவினரை வழங்கி கொள்ளுங்கள் என்று கூறி விட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசனை பின்தொடர்ந்து சென்ற திமுக பிரமுகர் பரமேஸ்வரனின் ஆதரவாளர்கள், உறவினர்கள், திமுக ஆட்சியில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் எப்படி பணம் கொடுக்கலாம் என்று கூறி சரமாரியாக அவரை தாக்கினர்.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தரப்பு புகார் அளித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் ரமேஷ் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார் அதில் தாக்குதல் நடத்தியது விவரமாக தெரியவந்தது. இதனையடுத்து தன்னையும் தனது கார் ஓட்டுநர் அருண்குமார் என்பவரையும் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி செவ்வாபேட்டை காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் புகார் அளித்துள்ளார்.
அரசு அளிக்கும் நிவாரண நிதி வழங்குவதில் திமுக பிரமுகர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்சிப் பாகுபாடின்றி மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்து சுமூகமாக அனைத்து இடங்களிலும் திறம்பட கொரோனா நிவாரண பணிகளை தமிழக அரசு செய்து வரும் சூழலில் இதுபோன்று ஒரு சில திமுகவினரால் தான் பிரச்சனை எழுகிறது என்று தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் இதில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்
திருவள்ளூர் செய்தியாளர் பார்த்தசாரதி