வாக்கு எண்ணிக்கை - பிற்பகலுக்குள் முன்னணி நிலவரம் தெரிய வரும்

 


சென்னையில் லயோலா, ராணி மேரி கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் என மூன்று இடங்களிலும், 4 அல்லது 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்படும். தனிக் கூண்டு அமைக்கப்பட்டு குறைந்தது 14 மேசைகள் போடப்படும். பெரிய தொகுதியாக இருந்தால் அதற்கு ஏற்ப மேசைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


ஒவ்வொரு மேசையிலும் தேர்தல் பணி மேற்கொள்ளும் ஒரு அலுவலரும், ஒரு வேட்பாளருக்கு 14 முகவர்களும், ஒரு முதன்மை முகவரும் அனுமதிக்கப்படுவர். முகவர்கள் அனைவரும் கூண்டுக்கு வெளியே இருக்க வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான மொத்த வாக்குகள் மற்றும் பிற விபரங்கள் கண்ட்ரோல் யூனிட் எனப்படும் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பதிவாகி இருக்கும். ஒரு மேசைக்கு ஒரு சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்குசாவடிகளில் பதிவான கட்டுப்பாட்டு இயந்திரம் மட்டுமே வைக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டுபாட்டு இயந்திரத்தை முகவர்களுக்கு உயர்த்தி காட்டுவார். முதலில் பொத்தானை அழுத்தியதும் எந்த சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்குசாவடி என்ற விபரமும், அதை தொடர்ந்து எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டனர், மொத்தமாக பதிவான வாக்குகள் எவ்வளவு எந்த வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகின என்பதும் திரையில் தெரியும்.

வாக்கு பதிவு முடிந்த பின்பு 17-சி விண்ணப்பம் மூலம் ஒரு வாக்குசாவடியில் பதிவான வாக்குகளில் விபரங்கள் கட்சி முகவர்களுக்கு தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின் போது இதை ஒப்பிட்டு, பதிவான மொத்த வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால் கட்சி முகவர்கள் கேள்வி எழுப்பலாம்.

பதிவான மொத்த வாக்குகள் தெரிவித்த பின் கடைசியாக நோட்டாவில் பதிவான வாக்குகள் கணக்கிடப்படும். அத்துடன் கட்டுப்பாட்டு இயந்திரம் மூடி பாதுகாப்பாக வைக்கப்படும். இதுபோன்று 14 மேசைகளிலும் முடியும் போது ஒரு சுற்று முடிந்ததாக கணக்கிடப்படும். இதை தொடர்ந்து ஒரே நேரத்தில் 14 மேசைகளிலும் அடுத்த சுற்றுக்கான கட்டுப்பாட்டு இயந்திரம் வைக்கப்படும். வாக்குசாவடிக்கு ஏற்ப சுற்றுகளின் எண்ணிக்கையும் அமையும்.

குறைந்தது 15 சுற்றுகளில் இருந்து அதிகபட்சமாக 30 சுற்றுகள் வரை செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 14 மேசைகள் போடப்படுவதால் பிற்பகலுக்குள் வெற்றி வேட்பாளரின் முன்னணி விபரம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.  மேலும் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு, தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேசைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், முழுமையான தேர்தல் வெற்றி நிலவரத்தை அறிய நள்ளிரவு 12 வரை காத்திருக்க வேண்டி இருக்கும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்