வி.சி.க பொருளாளர் மறைவு: கொரோனாவின் கொலைவெறித் தாகம் எப்போது தணியும்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!


 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசப்புக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சென்னை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து முகமது யூசப் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திரு. முகமது யூசுப் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

அவரது மறைவு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அன்புச் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், அந்த இயக்கத்தின் மற்ற தோழர்கள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தகவலறிந்ததும் தொல். திருமாவளவன் அவர்களைத் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். முகமது யூசுப் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், வி.சி.க. தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களங்கமில்லா நட்புக்குச் சான்றாக வாழ்ந்தவர்!

வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில், “அன்புச் சகோதரர் முகமது யூசுப் அவர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சந்தித்த நாள்முதல் தனது இறுதி மூச்சுவரையில் எனக்குத் தோளோடு தோள்கொடுத்து நின்றவர்.

உழைப்போரை ஊக்கப்படுத்தும் உயரிய பண்புகள் கொண்டவர். ஆற்றல் உள்ளோரை அரவணைத்து அங்கீகரிக்கும் ஆற்றல் உள்ளவர். இளந்தலைமுறைக்கு வழிவிட்டு இயக்கம் வலுப்பெற இயங்கியவர். இஸ்லாமியர் கட்சி மற்றும் இஸ்லாமியர் தலைமை என்னும் அடையாளங்களைத் தாண்டி, புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளைப் பேசி, ஜெய்பீம் என உரத்து முழங்கி வரலாற்றுத் தடங்களைப் பதித்தவர்.

அன்புச்சகோதரர் முகமது யூசுப் இன்று நம்மோடு இல்லை என்பதை என்னுள்ளம் ஏற்கவில்லை. கட்சி உறவு என்பதைத் தாண்டி தனது குடும்ப உறவாய் என்னை ஏற்றுக்கொண்டு என்மீது உளமாற அன்பையும் பரிவையும் ஒருசேர உகுத்தவர். கண்ணியம் மிகுந்த தோழமைக்கு அடையாளமாய் கடைசி மூச்சுவரையில் வாழந்துகாட்டிய அருமைச் சகோதரர் முகமது யூசுப் அவர்களின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதகுலத்தையே அழித்தொழிக்கும் கொரோனாவின் கொலைவெறித் தாகம் எப்போது தணியும்?" என தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்