ஸ்டெர்லைட் போராட்டத்தில் பதியப்பட்ட வழக்குகள் வாபஸ்: கைது செய்யப்பட்ட 93 பேருக்கு ரூ.1 லட்சம் - தமிழக அரசு அறிவிப்பு

 


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி 22-05-2018-ல் 20,000-த்துக்கு அதிகமான தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு 13 பேரை சுட்டுக்கொன்றனர். மேலும், இந்த கலவரம் தொடர்பாக ஏராளமானோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையின் இடைக்கால அறிக்கையை முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், கடந்த 14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்தநிலையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்த அறிக்கையில் இந்தப் போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளை திரும்பப் பெற ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்தப் பரிந்துரைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் காவல்துறைத் தலைவரின் அறிக்கை பெறப்பட்டு அரசால் கவனமாக பரிசீலிக்கப்பட்டது. மேற்கூறிய பரிந்துரைகள் மற்றும் கருந்துரைகளின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்வரும் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்.

1.இந்தச் சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில், மத்திய குற்றபுலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.

2. 22-05-2018 அன்று நடந்த சம்பவத்துக்கு முன்னர் இந்தப் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் உள்ளிட சில வழக்குகள் தவிர ஏனைய வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

3. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்கு காயங்களும், பலருக்கு மனஉளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அதனடிப்படையில், 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும். இதுதவிர ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டதால், வாழ்வாதாரம் இழந்துவாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

4. ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் போராட்டத்தின்போது தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்ட நபர்களின் உயர்கல்விக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)