9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவில் காவல்துறை பயிற்சிப் பள்ளி டிஜிபி-யாக பதவி வகிக்கும் ஷகீல் அக்தர், சிபிசிஐடி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும். நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக உள்ள கந்தசாமி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஈரோட்டில் சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபியாக உள்ள ரவி, சென்னை மாநகரக் காவல்துறை நிர்வாகப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐ.ஜியாக இருக்கும் ஈஸ்வரமூர்த்தி, உளவுத்துறை உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் எஸ்.பியாக பதவி வகிக்கும் அரவிந்தன், உளவுப்பிரிவு சிஐடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் புதிய பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி காவலர் பயிற்சிப் பள்ளி எஸ்.பி.யாக இருந்த சரவணன், குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு, பாதுகாப்புப் பிரிவு சிஐடி - 1 எஸ்.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக இருந்த சாமிநாதன், பாதுகாப்புப் பிரிவு சிஐடி - 2 எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.