பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புத் தொகை;தமிழக முதல்வர் அறிவிப்பு..

 


கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவித்துவரும் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான திட்டங்கள் மற்றும் உதவிகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

அந்த வகையில் தமிழக முதல்வரும், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். 

கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிட சிறப்பு பணிக்குழு ஒன்று ஏற்கெனவே தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகை அளிக்கப்படும் என்றும், இந்த ரூ. 5 லட்சம் வைப்புத்தொகை 18 வயதில் வட்டியுடன் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் அவர்களுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி, விடுதிக்கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார். 

கொரோனா தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு உடனடியாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும். 

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள், விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

குழந்தைகள் வளர்ச்சியை கண்காணிக்க ஒரு சிறப்புக்குழுவையும் முதல்வர் நியமித்துள்ளார்.