இ-பதிவு சேவை கட்டாயமாக்கிய பின்பு சென்னையில் ஒரேநாளில் 5,428 வாகனங்கள் பறிமுதல்!

 
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த மே 24ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  ஊரடங்கின் தொடக்கத்தில் பலரும் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் அதிகளவில் வெளியில் சுற்றி வந்தனர்.


இதனையடுத்து கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது. கடைகளை காலை 10 மணிக்கு அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாவட்டத்திற்குள் செல்லவும் இ.பதிவு சேவை கட்டாயம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இ_பதிவு சேவை கட்டாயமாக்கப்பட்ட பின்பு காவல்துறையினர் சோதனை சாவடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வாகன தணிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  வாகனங்களில் செல்வோரை நிறுத்தி இ.பதிவு உள்ளிட்ட உரிய ஆவணங்கள் உள்ளனவா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஒரு நாளில்  மட்டும் சென்னையில் ஊரடங்கு வழிக்காட்டு நெறிமுறைகளை மீறியதாக 3,422 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு  5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் , முக கவசம் அணியாத 3,518 நபர்கள் மற்றும் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காத 391 நபர்கள்  மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 75 கடைகள் மூடப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம்,  9 லட்சத்து 90 ஆயிரத்து 500 ரூபாய் அபராத தொகை பெறப்பட்டுள்ளது.
நேற்று முந்தினம் 2,855 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,082 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.