நிவாரண நிதி: எம்.எல்.ஏ.க்கள் வருகைக்காக 4 மணி நேரம் காத்திருந்த மக்கள்!

  


தஞ்சையில், கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க  சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாமதமாக வந்ததால், நான்குமணி நேரமாக சமூக இடைவெளியின்றி  பொதுமக்கள் காத்திருந்தனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் ஏற்படும் இழப்பை  ஈடுசெய்யும் விதமாக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு  4000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி முதல் தவணையாக இந்த மாதம் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.


தஞ்சாவூரில் உள்ள 1185 ரேசன் கடைகள் மூலம் 6,70,430 குடும்ப அட்டைகளுக்கு நிவாரண நிதி  வழங்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி தஞ்சாவூர் காவிரி சிறப்பு அங்காடியில் திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.நீலமேகம் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற இருந்தது.

காலை 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக  தெரிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் எம்எல்ஏக்கள் வராததால், தஞ்சை காவேரி கூட்டுறவு சிறப்பங்காடியில் உள்ள ரேஷன் கடையில் நிவாரண நிதி வாங்க வந்தவர்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரை சமூக இடைவெளி இன்றி அருகருகே அமர்ந்திருந்தனர். கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், அரசு நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு இன்றி  4 மணி நேரம் வரை காத்திருக்க வைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

பிற்பகல்  12.30 மணிக்கு பிறகு வந்த எம்எல்ஏக்கள் , குடும்ப அட்டைதாரர்களுக்கு  2000 ரூபாய் வழங்கினர். கொரோனா நேரத்தில் எளிமையாக நிதியை வழங்காமல், இத்தகைய  நிகழ்ச்சிகள் தேவையா எனவும் பொதுமக்கள் இடையே பேச்சு எழுந்தது.