பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேரறிவாளன். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, உயர் நீதிமன்றம் பல முறை பரோல் தந்துள்ளது.
இந்நிலையில், பேரறிவாளனுக்கு கரோனா தொற்றைக் கணக்கில் கொண்டும், அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டும் நீண்ட விடுப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து அவருக்கு சிறை விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் ஏ.ஜி. பேரறிவாளனுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் டி. அற்புதம்மாள், தமிழக அரசுக்கு அளித்திருந்த கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பேரறிவாளனுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.