ஊரடங்கு விதிகளை மீறியதாக காஞ்சிபுரத்தில் இதுவரை 2,352 வாகனங்கள் பறிமுதல்!
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவையில்லாமல் வெளியே வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.
காஞ்சிபுரம் நகரில் முக்கிய சந்திப்புகளான பூக்கடைச்சத்திரம், மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா தலைமையில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை மேற்பார்வையில் ஆங்காங்கே காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி, தீவிர வாகன சோதனை செய்து, தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
விதிமுறைகளை மீறி வந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்வதுடன், வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் 279 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவித்த நாள் முதல் இன்று வரை மாவட்டத்தில் 2,352 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.