ரூ.2000/-புதிய ரேஷன் கார்டுக்கும் நிவாரண தொகை... யாருக்கெல்லாம் கிடையாது?

 


மே 2 வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட ரேஷன் கார்டுக்கு மட்டுமே நிவாரணத்தொகை வழங்கப்படும். அதற்கு பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை கிடையாது என அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழக அரசு நேற்றைய தினம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4153.39 கோடி செலவில், மே 2021 மாதத்தில் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க ஏற்கெனவே மாண்புமிகு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2,14,950 புதிய அரிசி குடும்ப அட்டைகளை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வாழ்வாதாரத்திற்கும் மேற்கூறிய உதவியை வழங்கிடும் வகையில், ரூ.42.99 கோடி செலவில் மே 2021 மாதத்தில் ரூ.2,000/- நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய ரேஷன் கார்டுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யாருக்கெல்லாம் கிடையாது? என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, மே 2 வரை ஒப்புதல் அளிக்கப்பட்ட ரேஷன் கார்டுக்கு மட்டுமே நிவாரணத்தொகை வழங்கப்படும். அதற்கு பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.