அரக்கோணம் இரட்டைக்கொலை வழக்கில் மேலும் பல ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு?


 அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (26), சூர்யா (26) ஆகிய இரு இளைஞர்கள் கடந்த 7ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இதில், அர்ஜூனனுக்குத் திருமணமாகி 10 நாட்கள்தான் ஆகியுள்ளன.

தேர்தல் முன்விரோதத்தால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்தப் படுகொலை அ.தி.மு.க-பா.ம.கவினரால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இரட்டைக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும்வரை கொலையுண்டவர்களின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அஜித், மதன் ஆகிய இருவர் ஏற்கனவே கைதான நிலையில், புலி என்ற சவுந்தர், நந்தகுமார், கார்த்தி, சத்யா ஆகிய மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சத்யா என்பவர் அ.தி.மு.க ஐ.டி விங்கில் செயலாளராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலைக்குப் பின்னணியில் அ.தி.மு.க - பா.ம.க-வைச் சேர்ந்த இன்னும் பலரும் சம்பந்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.