கர்ப்பிணிப் பெண் சுட்டுக் கொலை - குடிபோதையில் தந்தை வெறிச்செயல்



குடிபோதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையைத் தடுக்க முயன்றபோது, ஆத்திரம் அடைந்த தந்தை கர்ப்பிணி மகளை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள வரதேகவுண்டன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி மாதேவி (வயது 54). இவர்களுடைய மகள் வெங்கடலட்சுமி (வயது 23).


இவருக்கும், கர்நாடகா மாநிலம் மாலூரைச் சேர்ந்த சீனா என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுப்பெண் வெங்கடலட்சுமி தற்போது, மூன்று மாத கர்ப்பமாக உள்ளார்.


யுகாதி பண்டிகையையொட்டி கடந்த சில நாள்களுக்கு முன்பு வெங்கடலட்சுமி தாய் வீட்டுக்கு வந்திருந்தார். தமிழ்ப்புத்தாண்டு தினமான புதன்கிழமை (ஏப். 14) அன்று அருணாசலம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மாலை 04.00 மணியளவில் அவர், மனைவி மாதேவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.


.அப்போது இருவருக்கும் தகராறு முற்றியதில் அருணாசலம் மனைவியை நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி சுட்டு விடுவதாக மிரட்டினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகள் வெங்கடலட்சுமி தாயாரைக் காப்பாற்றுவதற்காக தந்தையை தடுக்க முயன்றார். அப்போது ஆத்திரத்தில் அருணாசலம் கர்ப்பிணி மகள் என்றும் பாராமல் வெங்கடலட்சுமியை சுட்டார்.


தோட்டா உடலைத் துளைத்ததில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் வெங்கடலட்சுமி. கூச்சலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வெங்கடலட்சுமியை மீட்டு, அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டது தெரியவந்தது.


இதுகுறித்து தகவல் அறிந்த தளி காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதற்கிடையே அருணாசலம் திடீரென்று தலைமறைவாகிவிட்டார். அவர் தளி வனப்பகுதிக்குள் சென்று பதுங்கி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்