தேர்தல் அதிகாரிகள் திமுகவிற்கு சாதகமாக செயல்படுவதாக அதிமுகவினர் சாலை மறியல்
ஆவடியில் தேர்தல் அதிகாரிகள் திமுகவிற்கு சாதகமாக செயல்படுவதாக கூறி அதிமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல ஆவடியில் அதிமுக சார்பில் அமைச்சர் பாண்டியராஜன் அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் நாசர் , சுயேட்சை வேட்பாளர்கள் என அனைவரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேர்தல் பணிக்குழு அதிகாரி சங்கிலி ரதி, அதிமுகவினர் கொடுக்கும் புகாரை விசாரிக்காமல் திமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் தெரிவித்தும். பரப்புரையின் போது இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்வதாகவும் கூறி திருமுல்லைவாயில் காவல்நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சங்கிலி ரதியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை ஆவடி உதவி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து போராட்டத்தை கைவிடச் செய்தார். தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான இன்று அதிமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.