தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என சென்னை உயர்நீதிமன்றம் சாடல்!

 


கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு காரணமான தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாகப் பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. தமிழகத்திலும், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கரூரில் ஓட்டு எண்ணிக்கையின்போது கொரோனா விதிகளை பின்பற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யக்கோரி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சஞ்சீப் பானர்ஜி தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக சாடினார்.

அவர் கூறுகையில், கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம். சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ததை தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இன்றைக்கு உள்ள நிலைக்கு முழுமையாக தேர்தல் ஆணையமே காரணம்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. உங்கள் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் எனக் குறிப்பிட்டார்.

இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், “தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்” என பதிலளிக்கப்பட்டது.

கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)