பிரதமர் படத்துடன் தங்கக் காசு, பணம்: திருநள்ளாற்றில் பறக்கும் படையினர் பறிமுதல்
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த பிரதமர் படத்துடன் கூடிய தங்கக் காசு, பணம் ஆகியவற்றைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருநள்ளாறு அருகே சொரக்குடி பகுதியில் நேற்று (ஏப்.3) இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி அஜித்குமார் தலைமையிலான குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அய்யனார் கோயில் தெருவில் இருசக்கர வாகனத்துடன் சிலர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்துள்ளனர். பறக்கும் படை குழுவினர் அருகில் சென்றபோது இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இருசக்கர வாகனத்தைச் சோதனையிட்டபோது, டேங்க் கவரில் ஒரு கிராம் அளவிலான 149 தங்கக் காசுகள், ரூ.90 ஆயிரத்து 500 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், திருநள்ளாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்துப் புகார் அளித்தனர். இந்தப் பொருட்கள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாகக் கொடுக்கக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்த தெளிவான விவரங்கள் அதிகாரிகள் தரப்பில் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.
ஒரு சிறிய பாலித்தீன் கவரில், ஒரு பக்கம் பிரதமர் நரேந்திர மோடி, மறுபக்கம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில், தேவாலயம், பள்ளி வாசல் படங்கள் அச்சிடப்பட்ட துண்டுச் சீட்டு, ஒரு கிராம் தங்கக் காசு, ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியன ஏற்கெனவே வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுவிட்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்களால் கூறப்படுகிறது. அவை தொடர்பான படங்களும் காரைக்கால் பகுதியில் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
திருநள்ளாறு தொகுதியில் பாஜக சார்பில் அண்மையில் அக்கட்சியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆர்.கமலக்கண்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இத்தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்படாததால் விரக்தியடைந்த முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். பின்னர் பி.ஆர்.சிவா என்.ஆர்.காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார். இந்த 3 பேருக்கு இடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது.