பணத்திற்காக மகளை விற்ற தாய்... வெளியான ஆடியோவால் அதிர்ச்சி

 


சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியை சேர்ந்த 48 வயதான சின்னப்பொண்ணு; இவரது மகள் 25 வயதான சுமதி. சுமதிக்கும் சதீஷ் என்பவருக்கும் பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.இந்த தம்பதிக்கு 9 வயது மற்றும் 7 வயதில் இரண்டு மகள்களும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மதுபோதைக்கு அடிமையான சுமதியின் கணவர் சதீஷ் அவரை பிரிந்து நாமக்கல் மாவட்டத்தில் தனியாக வசித்து வருகிறார்.

அதனால் சுமதி தனது தாய் சின்னப்பொண்ணு உடன் வசித்து வருகிறார். சின்னப் பொண்ணு தனது பேத்திகளை வளர்த்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த சென்னையை பூர்வீகமாக கொண்ட மார்க்கெட்டிங் ஏஜென்சி நடத்தி வரும் 53 வயதான கிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு, வீட்டு வேலைக்கு சென்றார் சுமதி. கிருஷ்ணனின் குடும்பம் சென்னையில் வசித்து வருவதால் அவர் மட்டும் சேலத்தில் வசித்து வந்தார்

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தனது இரண்டாவது மகளையும் கிருஷ்ணன் வீட்டிற்கு வேலைக்கு செல்லும் போது அழைத்துச் சென்றுள்ளார் சுமதி ஒரு கட்டத்தில் சிறுமியை கிருஷ்ணனின் வீட்டிலேயே அவருடன் இரவு நேரத்தில் விட்டுவர தொடங்கியுள்ளார் சுமதி. இதை கண்காணித்த சுமதியின் தாயார், தனது மகளைக் கண்டித்துள்ளார்.

நாமக்கல்லில் வசிக்கும் மருமகன் சதீஷிடம் இதுகுறித்து தகவல் சொல்ல விரும்பிய சின்னப்பொண்ணு பேருந்து இல்லாததால் நாமக்கல்லுக்கு நடந்தே சென்று சதீஷிடம் சொல்லியுள்ளார். ஆனால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே சிறுமியை கிருஷ்ணன் வீட்டில் விட்டு வர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களாக சிறுமியை வெளியூர்களுக்கு அழைத்து சென்ற கிருஷ்ணன் சிறுமியை யாரிடமும் காட்டாமல் வீட்டிலேயே அடைத்து வைக்க தொடங்கியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த சின்னப்பொண்ணு கடந்த 9 ஆம் தேதி பேத்தியை மீட்டுத்தருமாறு அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில் தனது மகளை தொழிலதிபர் கிருஷ்ணனிடம் பத்து லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டதாக சிறுமியின் தாய் சுமதி, தனது தங்கையிடம் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

குழந்தையை விற்றுவிட்டதாக முதல் ஆடியோவில் ஒப்புக்கொண்ட சுமதி, அதன் பிறகு அதற்கு மறுப்பு தெரிவித்து பேசும் மற்றொரு ஆடியோவும் வெளியானது தனது பேத்திய தனது மகளே விற்றுவிட்டதாகவும் கிருஷ்ணன், தனது பேத்தியை என்ன செய்தார் என்று தெரியவில்லை என்றும் இதுகுறித்து முழுமையான விசாரணையை தொடங்க வேண்டும் என்றும், அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரில் பாட்டி சின்னப்பொண்ணு தெரிவித்துள்ளார்

இதற்கிடையே சின்னப்பொண்ணுவின் புகாரை தொடர்ந்து கிருஷ்ணனிடம் இருந்து சிறுமியை மீட்ட மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், சிறுமியை காப்பகத்தில் வைத்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.