டோக்கன் பணப்பட்டுவாடா; அதிமுகவினர் இருவர் மீது வழக்குப்பதிவு..

 


சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர்களுக்குக் கொடுத்த டோக்கனுக்கு தற்போது அதிமுகவினர் பணம் விநியோகிப்பதாக புகார் எழுந்ததன்பேரில், அக்கட்சியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அம்பத்தூர் தொகுதியில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள அலெக்சாண்டர் போட்டியிடுகிறார். 

அவருக்கு எதிராக திமுக சார்பில் ஜோசப் சாமுவேல் என்பவர் போட்டியிடுகிறார். 

இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க எண்ணி, 89வது வார்டில் டோக்கன் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது இருந்த தேர்தல் நடவடிக்கைகளால் பணம் விநியோகிக்க முடியாத காரணத்தால் தற்போது வெங்கடேசன், தாமோதரன் ஆகிய இருவரும் வீடுவீடாகச் சென்று வாக்காளர்களுக்கு தலா ரூ.500 பணம் விநியோகித்துள்ளனர். 

இந்த தகவலறிந்த திமுக நிர்வாகிகள், இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கொரட்டூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

அவர்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து பைக் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் பரப்புரையின்போதே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவரும் நிலையில், அதிமுகவினரின் இந்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.