பாண்டிபஜார் காவல் நிலைய ஆய்வாளர், ஒவ்வொரு தெருக்களிலும், மொபைல் எண்ணை விளம்பரம் செய்துள்ளது, வரவேற்பை பெற்றுள்ளது.

 


தி.நகர் ; பொதுமக்கள் எளிதில் தன்னை தொடர்பு கொள்வதற்காக, பாண்டிபஜார் காவல் நிலைய ஆய்வாளர், ஒவ்வொரு தெருக்களிலும், மொபைல் எண்ணை விளம்பரம் செய்துள்ளது, வரவேற்பை பெற்றுள்ளது.


தி.நகர், சென்னையின் வர்த்தக மையமாக திகழ்கிறது. உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும், ஏராளமானோர், ஷாப்பிங் செய்ய வருகை தருவர்.அவ்வாறு வருவோரின் கவனத்தை, சிலர் திசை திருப்பி, திருட்டு சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். மொபைல் பறிப்பு, செயின் பறிப்பு சம்பவங்களும், ஆங்காங்கே அரங்கேறியபடி தான் இருக்கின்றன.

குற்றச்சம்பவங்களால் பாதிக்கப்படுவோர், உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க முடியாத சூழ்நிலை தான், பெரும்பாலான இடங்களில் உள்ளது.இதனால், பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ஆய்வாளர் தனசேகரின் மொபைல் எண்: 94981 38392, ஒவ்வொரு தெரு சுவர்களிலும் எழுதப்பட்டுள்ளன.இதனால், ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், உடனடியாக அப்பகுதிமக்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், எளிதாக மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்க முடிகிறது.

இதே போன்று, மற்ற காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்களும், தங்களது பகுதிக்கு உட்பட்ட தெருக்களில், மொபைல் எண்ணை எழுதி வைத்தால், உபயோகமாக இருக்கும்.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சென்னையில், பெரும்பாலும் காவல் நிலைய எண்கள் மட்டும் தான், பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

அவற்றில் தொடர்பு கொண்டால், பல நேரங்களில், தொலைபேசி எண் உபயோகத்தில் இல்லை என்று வரும். ஆனால், பாண்டிபஜார் காவல் நிலைய ஆய்வாளரின் மொபைல் எண் வெளியிடப்பட்டது பயனளிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.