'வாழ்வாதாரம்...' - கொரோனாவால் புதிய கட்டுப்பாடுகளின் தாக்கம் எத்தகையது?

 "மக்களின் அலட்சியத்திற்கு அரசே காரணம்" என்கிறார்கள் மருத்துவர்கள்; "எங்களின் வாழ்வாதாரத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்று கதறுகின்றனர் சிறு வணிகர்கள். தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில், அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த நடவடிக்கை எத்தகையது? - இதோ ஒரு விரைவுப் பார்வை...

கொரோனா பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு தொடர்ந்து இருந்து வந்தது. அண்மையில் தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில், அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலில் அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம். 

 • மதம் சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வியாபாரக் கடைகள் வரும் 10-ஆம் தேதி முதல் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி.
 • இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.
 • தியேட்டர்களில் மீண்டும் 50 சதவீத இருக்கை மட்டுமே செயல்பட வேண்டும்.
 • தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
 • மத்திய உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும்.
 • பேருந்துகளில் பயணிகள் நின்றவாறு பயணிக்க அனுமதி இல்லை.
 • ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
 • வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்.
 • வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி.
 • உணவகங்கள், தேனீர் கடைகளில் இரவு 11 மணிவரை 50 சதவீத பேர் அமர்ந்து உணவு உண்ண அனுமதி.
 • பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றில் 50% அனுமதி.
 •  இதுகுறித்து மருத்துவர் ரவீந்திரநாத் கூறுகையில், “அரசு கட்டுப்பாடுகளை விதித்திருப்பது வரவேற்கதக்கது. ஆனால், மக்கள் சிரமத்திற்குள்ளாமல் அதற்கான உதவிகளை செய்ய வேண்டும். கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு அரசே அவற்றை மீறுகிறது. 50% சதவீதம் பேர்தான் பேருந்துகளில் பயணிக்க வேண்டுமென்றால் அதற்கான பேருந்துகளின் எண்ணிக்கையை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும்.

  அதேபோல் இரவு நேர ஊரடங்கை கூட அரசு செயல்படுத்தலாம். அரசிடமும் மக்களிடமும் அலட்சியம் இருக்கிறது. தமிழகத்தில் இரண்டாம் அலை வர வாய்ப்புள்ளது என தொடர்ந்து கூறி வந்தோம். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர் 'ஜெயலலிதா ஆட்சியால் இரண்டாம் அலை வராது' என கூறினார். அதனால் மக்களிடம் பயம் போய்விட்டது. மக்களின் அலட்சியத்திற்கு அரசே காரணம். தேர்தல் பிரசார கூட்டங்களில் கூட யாரும் முகக்கவசம் அணியவில்லை. தேர்தல் ஆணையம் இதில் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாகவே பார்க்கிறேன்” என்றார்.

 • வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், “கட்டுப்பாடுகள் தேவைதான். அதேபோன்று மக்கள் விழிப்புணர்ச்சியை அரசு ஏற்படுத்த வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். தேர்தலில் ஏற்பட்ட கூட்டத்தை நினைத்து பார்த்திருப்பார்கள். ஆனால் கோயம்பேடு சிறு வணிகர்களை ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அவர்களின் வாழ்வாதாரத்தை சிந்தித்து பார்க்க வேண்டும். ஏற்கெனவே கொரோனா தொற்றில் வணிகர்கள் பாதிக்கப்பட்டனர்.

  மத்திய, மாநில அரசுகள் பெரிதாக எந்த உதவியும் செய்யவில்லை என்ற ஆதங்கம் வியாபாரிகள் மத்தியில் இருந்தாலும் கூட அன்றாடம் வயிற்றுப்பசியை தீர்த்துக்கொள்ளக்கூடிய வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனவே, அதை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டால்தான் பல்வேறு வியாபாரிகளின் வாழ்க்கையை அரசு காக்க முடியும்” என்றார்.

  தொற்று நோய் மருத்துவர் பூங்குழலி கூறுகையில், “இந்தக் கட்டுப்பாடுகள் எதிர்ப்பார்த்ததுதான். ஆனால் இந்த 50 சதவீதம் என்பது நடைமுறைப்படுத்துவது கஷ்டம் தான். தியேட்டர்களில் வேண்டுமானால் கண்காணிக்க முடியும். மற்ற இடங்களில் கண்காணிப்பது சிரமமான விஷயம். தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். 50% சதவீத கட்டுப்பாட்டில் நம்பிக்கை இல்லை. இது தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனால், கொரோனா பரவல் அதிகரிக்கத்தான் செய்தது.

 • முழு ஊரடங்கு அறிவித்து சிறிது சிறிதாக தளர்வுபடுத்தினால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என நினைக்கிறேன்” என்றார்.

  கோயம்பேடு காய்கறி சங்கத்தின் தலைவர் ராஜசேகர் கூறுகையில், “கொரோனாவால் ஏற்கெனவே சில்லறை வியாபாரிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. தற்போது முழுவதும் மூட வேண்டும் என்றால் அவர்கள் நடுத்தெருவிற்குதான் வரவேண்டும். அதை மனதில் வைத்து அவர்களுக்கு சுழற்சி முறையில் கடை திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

 • இதுகுறித்து தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன சங்கத்தின் தலைவர் ஜுடோ கூறுகையில், “சாமானியர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் சலுகை கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் எவ்வித சலுகையும் கொடுக்காமல் இன்று அரசியல் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த 50% ஒரு புறம் கண் துடைப்பாக இருந்தாலும், அதை நாங்கள் வரவேற்கிறோம். ஏனென்றால், பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை உணர்கிறோம். ஆனால் இதை தேர்தலுக்கு முன்பு ஏன் விழிப்புணர்வு கொடுக்கப்படவில்லை.

  பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு மட்டும் எடுத்தவுடன் 50 % லாக்டவுன், விதிமுறைகளை கடுமையாக்குவது ஏன்? என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறோம்” என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு