சென்னையில் தடுப்பூசி தட்டுப்பாடு; பொதுமக்கள் அவதி..

 


சென்னை மாநகராட்சி சார்பில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையங்கள், சமுதாய நல மையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இதுவரை கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என மொத்தம் 12 லட்சத்து 93 ஆயிரத்து 775 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக பல தடுப்பூசி மையங்களில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2-ம் தவணைபோட முடியாமல் அவதிப்படுகின்றனர். 

சென்னை அபிராமபுரம் பகுதியில் 2-ம் தவணை கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்ள நீண்ட நேரமாக பொதுமக்கள் காத்திருந்தனர். பின்னர், தடுப்பூசி இல்லை என தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

கடந்த 3 நாட்களாகவே இதுபோல் நடந்ததால், சுகாதார அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது; மாநில சுகாதாரத் துறைதான் மாநகராட்சிக்கு தடுப்பூசிகளை விநியோகம் செய்கிறது. மத்திய அரசிடம் இருந்து வரும் தடுப்பூசியில் பாதியை மாநகராட்சிக்கு கேட்டிருக்கிறோம். தற்போது ஒரு தொகுப்பு தடுப்பூசி மாநில அரசுக்கு வந்துள்ளது. அதிலிருந்துமாநகராட்சிக்கு வழங்கப்பட்டவுடன், தட்டுப்பாடு நீங்கும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.